மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் அரசு ஒப்பந்தத்துடன் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் ஆட்டு வியாபாரிகள் சிலர் ஆட்டுக்குட்டிகள், ஆடுகளை அதிகளவிற்கு எடை கூடுதலாக காட்டி மோசடியாக விற்பனை செய்வதற்காக ஆடுகளுக்கு பம்ப் மூலமாக வயிறு முழுக்க தண்ணீரை நிரப்பி விவசாயிகளிடமும், பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர்.
இதனால் விற்பனை செய்யப்படும் ஆடுகள் உயிரிழப்பதாகக் கூறி மதுரை மாவட்டம் சாமநத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் உயிரிழந்த ஆடுகளுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆட்டுச் சந்தைகளில் அதிக லாப விற்பனைக்காக ஆடுகளுக்குத் தண்ணீரை வயிற்றுக்குள் வலுக்கட்டாயமாகச் செலுத்துவதால் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆடுகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாகவும், தான் வாங்கிய 8 ஆடுகள் உயிரிழந்ததாகவும் கூறி உயிருக்குப் போராடிய நிலையில் ஆடு ஒன்றை ஆட்சியர் அலுவலகம் முன்பாக துடிதுடிக்க போட்டுவிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.