தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஓங்கோலில் வந்தவர்களெல்லாம் தமிழர் என்றால் மோடியும் தமிழர் தான்" - அண்ணாமலை ஆவேசம்! - பிஜபி

Annamalai Press Meet: ஓங்கோலில் இருந்து வந்தவர்கள் தங்களைத் தமிழர்கள் என்றால், குஜராத்தில் பிறந்து தமிழ் மீதான ஆர்வத்தைக் காட்டும் மோடி கண்டிப்பாகத் தமிழர் தான் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Madurai
Madurai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 9:12 PM IST

Updated : Jan 6, 2024, 10:29 PM IST

"ஓங்கோலில் வந்தவர்களெல்லாம் தமிழர் என்றால் மோடியும் தமிழர் தான்" - அண்ணாமலை ஆவேசம்!

மதுரை: மதுரை பாண்டிகோயில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, "ஜன.9ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. திமுக அரசுப் போக்குவரத்துக் கழகத்தை நிர்மூலமாக்கிவிட்டது. மாநில அரசு 8ஆம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பழைய ஓய்வூதியம் திட்டத்திற்குச் செல்ல சாத்தியக்கூறு இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய நிலையில், திமுக அரசின் தவறான வாக்குறுதியால்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் என்பது போட்டிக்குச் சம்பந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர்.

பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் மைதானத்திற்குச் செல்லத் தயாராக இல்லை. ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமானவர்கள் திமுக - காங்கிரஸ்தான். இந்த நிலையில், விளையாட்டு மைதானத்திற்குக் கருணாநிதி பெயர் சூட்டப் பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரும் காலத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் கருணாநிதி பெயர்தான் வைக்க வேண்டும் எனவும் கூறுவார்கள்.

அமைச்சர் மூர்த்தி வந்த பிறகு பத்திரப்பதிவு துறையில் அதிக அளவில் லஞ்சம் நடக்கிறது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் புரோக்கர் மூலமாக செல்கிறது. பத்திரப்பதிவு துறை மிக மோசமான பண வசூல் துறையாக மாறியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி பத்திரப்பதிவு அலுவலகத்திலும், புரோக்கர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தினால் கோடி கோடியாகச் சிக்கும்.

அதனை வைத்து தமிழ்நாட்டின் பாதி கடனை அடைத்துவிடலாம். விவசாயிகள் மீதான அமலாக்கத்துறை நோட்டிஸில் சாதிப் பெயர் குறிப்பிட்டுள்ளது. இது காவல்துறையின் எஃப்ஐஆர்-ல் சாதி பெயர் இடம்பெற்றதால்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "2024-கான நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விடப் பிரதமர் வேட்பாளருக்கான தகுதி, தமிழகத்தில் யாருக்கும் இல்லை. அப்படி இருப்பதாகக் கூறினால், மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ, அவர்களுடன் கூட்டணி வைப்போம். இந்தியா கூட்டணி சுய நலக்கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மோடியை ஆதரிக்கும் கூட்டணி, மோடியை ஏற்றுக் கொண்டு யார் வந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்வோம்.

பொன்முடி வழக்கில் நீதிபதி மீது கம்யூனிஸ்ட், விசிக தலைவர் ஆகியோர் சந்தேகம் எழுப்புகின்றனர். அவர்கள் திமுகவிலேயே இணைந்து விடலாம். திமுக கூட்டணியை பாஜகவுடன் ஒப்பிட வேண்டாம். தற்போது தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது. நான் எந்த கூட்டணி தலைவரையும் சந்திக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவு வேண்டும் என்றால், எங்களைச் சந்திப்பார்கள். என்னுடைய வேலை பாஜகவைப் பலப்படுத்துவதுதான்.

இந்தியாவைப் போலத் தமிழகத்திலும் மண்டல வாரியாக வரிக்கு ஏற்ப திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பேசுவாரா? வளர்ச்சி அடையாத மாவட்டங்களுக்குத் தமிழக அரசால் நிதி முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? தமிழகத்திற்கு மாவட்ட வாரியாக வரி செலுத்தியது, திட்டங்கள் செயல்படுத்தியது குறித்து அறிக்கை வெளியிடுவார்களா? பீகாரை விட தமிழகத்தில் சில மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. ஏற்கனவே துபாய், ஜப்பான், சிங்கப்பூர் சென்று வந்ததால் வந்த முதலீடுகள் எவ்வளவு? தேர்தலுக்காக இது போன்று நாடகமாடுகின்றனர். ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களை மிரட்டி ஒப்பந்தம் போடப்படுகிறது. தமிழக அரசு மக்களை ஏமாற்றாமல் புதிய நிறுவனங்களின் முதலீடுகள் என்ன என்பதைக் கூறுங்கள்.

2024 மட்டுமல்ல, 2038 வரை மோடிதான் பிரதமர். திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் எத்தனை பேர் தமிழர்கள். இங்கு ஓங்கோலில் இருந்து வந்தவர்கள் தங்களைத் தமிழர்கள் என்கிறார்கள். குஜராத்தில் பிறந்து தமிழ் மீதான ஆர்வத்தைக் காட்டும் மோடி கண்டிப்பாகத் தமிழர் தான். அவரை ஏன் தமிழன் என்று சொல்லக்கூடாது.

டெல்டாவிற்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மோடிதான் உண்மையான டெல்டாகாரர். தமிழகத்தில் மோடி எங்குப் போட்டியிட்டாலும், சாதனை வெற்றியைப் பெறுவார்" என கூறினார்.

இதையும் படிங்க:நடுவானில் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட விமான கதவு.. அடுத்து நடந்தது என்ன?

Last Updated : Jan 6, 2024, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details