மதுரை: நேபாளத்திலுள்ள மக்வன்பூர் மாவட்டம் ஹெட்டாடா நகரத்தில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாளானது வழக்கம்போல் எல்லோருக்கும் நன்றாகத்தான் விடிந்தது. ஆனால் பிந்தபாசினி கன்சகர் என்ற 19 வயது பெண்ணுக்கு மட்டும் அந்த துயர சம்பவம் நடக்கும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. வழக்கம்போல தனது ஃபேன்ஸி ஸ்டோரை திறந்து கடையில் பிந்தபாசினி அமர்ந்திருந்தார்.
காலை 11 மணியளவில், திலீப்ராஜ் கேசரி என்பவர் கையில் சிறிய பாட்டிலோடு வந்தார். இதனைக் கண்ட பிந்தபாசினி என்னவென்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென அந்தப் பாட்டிலின் மூடியைத் திறந்து பிந்தா முகத்தில் வீசினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பிந்தபாசினி நிலை குலைந்தார்.தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் பிந்தாவின் அழகிய முகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஆசிட் தாக்குதல் நடத்திவிட்டு திலீப்ராஜ் தப்பிச் சென்றார்.
உயிர்போகும் வலியில் துடித்த பிந்தாவை, அவரது பெற்றோர் உடல் முதுவதும் தண்ணீர் ஊற்றி சற்று ஆசுவாசப்படுத்தினாலும், தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூன்று கட்டமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
ஆனாலும் முகத்தை நல்ல வண்ணம் சீரமைப்பதற்கு போதுமான மருத்துவ வசதிகள் நேபாளத்தில் இல்லாத நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘தேவதாஸ்’ மருத்துவமனையில், இதற்குரிய சிறப்பு சிகிச்சை அளிப்பதைக் கேள்விப்பட்ட பிந்தபாசினி, சிகிச்சைக்காக நேபாளத்தில் இருந்து மதுரை வந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரது முகத்தில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், உலகம் முழுவதும் தன்னைப் போன்றே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெண்களுக்கு இழைக்கப்படும் அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராக தன்னை ஒரு தீவிர செயற்பாட்டாளராக முன்னிறுத்தி வருகிறார்.
இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வாட்ஸ்அப் வழியாக பிந்தபாசினி கன்சகர் அளித்த தனிப் பேட்டியில், “ஆசிட் அட்டாக் என்பது உலகின் மிகக் கொடூரமான குற்றமாகும். உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்களில் திராவக வீச்சிலிருந்து தப்பிய எவரும் இதுவரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.