மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்த காவல் துறை, தன்னை கடுமையாக தாக்கினர். அப்போது என்னுடைய 4 நான்கு பற்கள் உடைக்கப்பட்டன.
இதில், தான் மட்டுமன்றி விசாரணைக் கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்திரவதை செய்தார். அதைத் தொடர்ந்து என்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி காவல் துறை குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும். காவல் துறை அதிகாரி தாக்கியதில் பற்கள் உடைந்த எனக்கு எஸ்சி, எஸ்டி உட்பிரிவில் வழக்குப் பதிந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணை அதிகாரியான அமுதா குழு விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.நாகர்ஜூன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். தொடர்ந்து அருண்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன், வழக்கின் தீவிரத்தை அறிந்து அரசு விரைவாக பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!