தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இரு மகன்கள் ஒரு மகள் என மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த பூல் பாண்டியன், தனது மனைவி இறந்த பின்பு பொது சேவையில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தின் மூலம் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த பூல் பாண்டியன், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசுப் பள்ளியில் தங்கியபடி மதுரையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று வந்தார். முதல் முறையாக கடந்த மே மாதம் பத்தாயிரம் ரூபாயை கரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் டி ஜி வினயிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நான்காவது முறையாக 10 ஆயிரம் வழங்கினார். அண்மையில் மீண்டும் பத்தாயிரம் நிதியுதவி வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக மீண்டும் மக்களிடம் யாசகம் பெற்ற பணத்தை ஆறாவது முறையாக தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் இதுவரை 60ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரணமாக ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். பூல் பாண்டியன் ஏற்கனவே தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம், தான் யாசகம் பெற்ற பணத்திலிருந்து புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வந்துள்ளார்.
நிவாரணம் வழங்கிய பூல் பாண்டியன் பிச்சை எடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல் பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்ட பூல் பாண்டியன், தற்போது கரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் நிதி வழங்கி வருகிறார். தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் வசூல் செய்து கரோனா நிதியளிப்பேன் என பூல் பாண்டியன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா வார்டில் படுக நடனம் - நோயாளிகள் உற்சாகம்