மதுரை:அனை்த்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு குறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "தொடர் சட்டப் போராட்டங்கள், மக்கள் போராட்டங்களை கடந்து இன்று அர்ச்சகர் மாணவர்கள் 24 பேரை ஆகமக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முதல் கட்டமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரியார் சமூக நீதிப் போராட்டம் அறிவித்த நாளான ஆகஸ்ட்,14ஆம் தேதியில், முதலமைச்சர் ஸ்டாலின், ‘மயிலைக் கபாலீஸ்வரர்கோவில் மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பேர் உள்பட 24 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கியுள்ளார். இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்க, கருவறைத் தீண்டாமையை ஒழிக்க,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டம், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் தடை கோரலாம்
உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள் வழக்கு, ஆதித்தன் வழக்கு, மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு, சபரிமலை வழக்கு எனப் பல தீர்ப்புகள் அர்ச்சகர் நியமனத்தோடு தொடர்புடையவை. மீண்டும் சில தீர்ப்புகளைக் காட்டி ஆகமங்கள், பழக்க வழக்க மரபுகள் மீறப்பட்டுள்ளன என்று ஆதிக்க வெறி பிடித்த சிலர் நீதிமன்றத்தை அணுகலாம்.