தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றாலநாதர் கோயிலில் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்புப் பட்டயங்கள் கண்டுபிடிப்பு..! - யார் இந்த அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியன்

Pandiyan coper inscription found in tenkasi: தென்காசி குற்றாலநாதர் கோயிலில் 5 பழமையான செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையின் சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

alagan perumal parakrama pandiyan coper inscription found in tenkasi Thirukutralanathar temple
அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்புப் பட்டயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 12:45 PM IST

மதுரை:தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் 5 பழமையான செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையின் சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள 46 ஆயிரத்து 90 கோயில்களில் உள்ள அரிய பழஞ்சுவடிகளையும், செப்புப் பட்டயங்களையும், செப்பேடுகளையும் திரட்டிப் பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்ய சுவடித் திட்டப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இத்திட்டப் பணியின் பொறுப்பாளராக இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா இருந்து வருகிறார். இந்த சுவடித்திட்டப் பணிக் குழுவினர் இதுவரை தமிழ்நாட்டிலுள்ள 676 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 9 செப்பேடுகள், 29 செப்புப் பட்டயங்கள், 2 வெள்ளி ஏடுகள், 1 தங்க ஏடுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்புப் பட்டயம்

தற்போது இந்த சுவடிக் குழுவினர் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் இருந்த 5 புதிய செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்துள்ளனர். அச்செப்புப் பட்டயங்களைப் படி எடுத்து நான் ஆய்வு செய்தபோது, செப்புப்பட்டயங்களில் 2 செப்புப்பட்டயங்கள் அழகன் பெருமாள் பாண்டியன் மற்றும் சீவல வரகுணராம பாண்டியன் ஆகியோர் பேரில் குற்றாலநாதர் சுவாமிக்கு சாயரட்சை கட்டளை வழங்கியது குறித்த ஒரு செப்புப்பட்டயம்.

அதில் அசாதுவாலா சாய்பு, இசுமாலிராவுத்தர் முதலான பலர் குற்றாலநாதர் சுவாமிக்கு நித்திய விழா பூசை கட்டளைக்கு தானம் வழங்கியது குறித்தும் கூறுகின்றன. மீதமுள்ள மூன்று செப்பேடுகளில் ஒரு செப்பேட்டில் திருஞானசம்பந்தர் திருக்குற்றாலம் குறித்துப் பாடிய திருப்பதிகப் பாடல்கள் 11 அமைந்து காணப்படுகின்றன.

மற்றொரு, செப்பேட்டில் திருநாவுக்கரசர் பாடிய திருஅங்கமாலை பதிகம் எழுதப்பட்டுள்ளது. இதில் 12 பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன. இறுதியில் குமரகுருபர சுவாமிகள் எழுதிய ஒரு பாடல் காணப்படுகிறது. இப்பட்டயம் கி.பி 1959ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இறுதியில் ஸ்ரீ காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பு காணப்படுகிறது.

மற்றொரு செப்புப்பட்டயத்தில் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் 20 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இறுதியில் குமரகுருபர சுவாமிகள் எழுதிய பாடல் ஒன்றும் காணப்படுகிறது. இந்த செப்பேடு கி.பி 1958இல் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பும் காணப்படுகிறது.

அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்புப் பட்டயம்

அழகன்பெருமாள் பராக்கிரமப் பாண்டியன்:பாண்டியர்கள் மதுரையில் வீழ்த்தப்பட்ட பின்பு தென்பாண்டி நாட்டுப் பகுதிகளில் சிற்றரசர்களாகப் பாண்டியர் குலத்தவர் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவ்வாறு ஆட்சி செய்து வந்த பாண்டியர்களில் தென்காசி பாண்டியர்கள், வள்ளியூர் பாண்டியர்கள், செங்கோட்டை பாண்டியர்கள், கயத்தாறு பாண்டியர்கள், நடுவக்குறிச்சி பாண்டியர்கள், கரிவலம்வந்த நல்லூர் பாண்டியர்கள், புலியூர் பாண்டியர்கள் என பலர் ஆட்சி செய்துள்ளனர்.

இவர்கள் வரலாறு குறித்து ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுகளும், பட்டயங்களும் கூறுகின்றன. இவர்கள் ஆட்சி செய்த காலம் கி.பி 14 - 18 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். குற்றாலநாதர் கோயிலில் உள்ள 2 செப்பேடுகள் அழகன்பெருமாள் பாண்டியன், சீவல வரகுணராம பாண்டியன் ஆகியோர் பெயரில் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட சாயரட்சை கட்டளை குறித்து பேசுகின்றன.

முதல் செப்பேட்டில் சாயரட்சை கட்டளையை நிறுவியவர்கள் பிள்ளைமார் சமூகத்தவர் என்று கூறப்பட்டுள்ளது. அதில் சாயரட்சை கட்டளைக்கு வருடம் 1க்கு பல்லக்குகாரர் பொன் 1ம், குதிரைச்சுருட்டிக்காரர் பணம் 5ம், தொழில்செய்து வருவோர் பணம் 2ம், கொத்துக்கார் பணம் 1ம் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

பிறிதோர் செப்புப்பட்டயத்தில் சாயரட்சை கட்டளையை உபய ராணுவத்தாரும் குடிமை செய்தொழிலாளிகளும் இணைந்து ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டளைக்கு வருடம் 1க்கு பல்லக்குகாரர் பணம் 10, குதிரை சுருட்டிக்காரர் பணம் 3, ராணுவம் பணம் 1, குடிபடை பணம் 1 என்ற விகிதத்தில் பணம் வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளைமார் சமூகத்தவர் ஏற்படுத்திய சாயரட்சை கட்டளை விவரம் அடங்கிய செப்பேடு கி.பி 1753ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. உபய ராணுவத்தார் படை எழுதிக் கொடுத்த சாயரட்சை கட்டளை விவரம் அடங்கிய செப்பேடும் கி.பி. 1753ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. மேலும், இவ்விருக்கட்டளைகளையும் காசி மடத்தவர் பரிபாலனம் செய்து வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த அழகன்பெருமாள் பராக்கிரமப் பாண்டியன்:அழகன்பெருமாள் பராக்கிரமப் பாண்டியனின் காலம் கி.பி 1473 – 1506 வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த அழகன்பெருமாள், பராக்கிரமப்பாண்டியனின் வரலாற்றை ‘அழகன்பெருமாள் கதை’ என்னும் ஓலைச்சுவடி தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, தென்காசியிலிருந்து ஆட்சி செய்த குலசேகரப்பெருமாள் பாண்டியனுக்கு பொன்னின் பெருமாள், தன்மப்பெருமாள் என்ற 2 ஆண்மக்கள் இருந்துள்ளனர்.

மூத்தவன் பொன்னின் பெருமாள் தென்காசி ஆட்சிபீடத்தில் அமர்கிறான். இளைவன் தன்மப்பெருமாள் புலியூரிலிருந்து ஆட்சி செய்கிறான். பின்னர் பொன்னின் பெருமாளுக்கு குலசேகரப்பெருமாள், வீரபாண்டியன் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்துள்ளனர். தன்மப்பெருமாளுக்கு அழகன்பெருமாள், சீவலமாறன், சின்னத்தம்பி ஆகிய மூன்று புதல்வர்கள் பிறந்துள்ளனர். அழகன்பெருமாளும் அவன் தம்பியரும் பல்வேறு போர்க்கலைகளைக் கற்று மிகப்பெரிய வீரர்களாகத் திகழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் அழகன்பெருமாளும் அவன் தம்பியரும் வளர்ந்து ஆளானபோது அரியணை ஏறிய குலசேகரப் பாண்டியனிடம் இளமுறைக்கூறு (இளைய வாரிசுமுறை பங்கு) கேட்டுள்ளனர். இதனால் கோபம் கொண்ட குலசேகரப் பாண்டியனின் தம்பி வீரபாண்டியனும், அமைச்சர் இராசகுலத்தேவனும் அழகன்பெருமாளையும் அவன் தம்பியரையும் அழித்தொழிக்க முடிவு செய்ததாகவும், பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அவர்களைக் கொலை செய்ய முயன்று இயலவில்லை எனக் கூறப்படுகிறது.

இறுதியில் இராசகுலத்தேவன், “உங்கள் அண்ணன் குலசேகரப்பாண்டியன் சீமையிலும், படைப்பரிவாரத்திலும், கருவூலத்திலும் பாதியைத் தர ஒத்துக்கொண்டான். நீங்கள் உங்கள் அண்ணனைக் காணவாருங்கள்” என்று நயவஞ்சகமாக அழைத்துள்ளார். அதனை உண்மை என நம்பிய அழகன்பெருமாளும் அவன் தம்பி சீவலமாற பாண்டியனும் குலசேகரப் பாண்டியனைக் காணப் புறப்பட்டு வந்துள்ளனர்.

ஆனால் வரும் வழியில் அமைச்சர் இராசகுலத்தேவன் அவர்களிடம் இருந்த ஆயுதத்தை முதலில் வஞ்சகமாகப் பறித்து, பின்பு அவர்கள் இருவரையும் கொலை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த இலங்கம் போன்ற ஒரு இருட்டு அறைக்குள் பிடித்து தள்ளி அறையை சங்கிலியால் பூட்டியுள்ளார். அறைக்குள்ளே மறைந்திருந்த அறுபது மல்லர்கள் அழகன்பெருமாள் மீதும் அவன் தம்பி சீவலமாற பாண்டியன் மீதும் பாய்ந்தனர்.

அழகன்பெருமாளும், சீவலமாற பாண்டியனும் வீரயுத்தம் செய்து இறுதியில் இருவரும் மடிந்தனர். அண்ணன்மார் இறந்ததை அறிந்த சின்னதம்பியும் தன் உயிரை வாளூன்றிப் பாய்ந்து மாய்த்துக் கொள்ளுகிறான். தம்பியர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை ஒற்றன் மூலம் அறிந்து குலசேகரப் பாண்டியன் இராசகுலத்தேவனை வெட்டிக்கொன்று விட்டு தன் உயிரைக் மாய்த்துக் கொள்ளுகிறான். அழகன் பெருமாளும், அவன் தம்பியரும் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை அறிந்து கயத்தாறு வெட்டும்பெருமாள் பாண்டியன் தென்காசி மீது படையெடுத்து வெற்றிப் பெற்றான்.

மேலும் மாபலி என்பவனைத் தென்காசியில் அரியணையில் அமரச்செய்தான் என்று ஓலைச்சுவடி குறிப்பிடுகிறது. மேற்சுட்டிய அழகன்பெருமாள் பாண்டியனையே செப்புப்பட்டயங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், அழகன்பெருமாள் பாண்டியனை செப்புப்பட்டயங்கள் கோசடிலவன், மாறன், திரிபுவனசக்கரவர்த்தி, கோனேரின்மை கொண்டான், ஸ்ரீபெருமாள் என்றெல்லாம் வியந்து பேசுகிறது.

மேற்சுட்டிய, இரண்டு செப்புப்பட்டயங்களும் சீவல வரகுணராம பாண்டியன் பற்றியும் குறிப்பிடுகின்றன. சீவல என்பது ‘ஸ்ரீ வல்லவன்’ என்ற சொல்லின் மருவு ஆகும். வரகுணராம பாண்டியன் தன் பெயருக்கு முன் சீவல எனும் அடைமொழியையும் பெயருக்குப் பின்னால் குலசேகரன் என்ற மூதாதையர் மரபுவழிப் பெயரையும் இணைத்து பயன்படுத்தியதாகவும், பட்டயத்தின் வழி அறிய முடிகிறது. வரகுணராம பாண்டியன் கி.பி 1613 – 1618 காலக்கட்டத்தில் ஆட்சி செய்ததாகவும் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

குற்றாலநாத சுவாமிக்கு இஸ்லாமியர் வழங்கிய நித்திய விழா பூஜை கட்டளை:நெல்லையப்பர் கோயிலில் உள்ள கி.பி 1751ஆம் ஆண்டு எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று உள்ளது. இச்செப்புப்பட்டயத்தில் லாலுகான்சவான் சாயுபு என்பவன் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்திய பூசைக்கு தானம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.

அதுபோல, குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கி.பி 1848ஆம் ஆண்டு நித்திய விழா பூஜை மற்றும் திருநெல்வேலி காந்தியம்மன் சிறுகாலப் பூஜைக்கான கட்டளைக்கு அசாதுவால சாயுபும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தானப்பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர். அதில், புடவைசாற்று மற்றும் இறங்குசாற்று கச்சை ஒன்றுக்கு கால்மாகாணியும் (1/64) நடைக்கான திரையாடை ஒன்றுக்கு மாகாணிப் பணமும் (1/16) சின் ஒன்றுக்கு அரை மாகாணி (1/32) வீதமும் வழங்கப்பட்டுள்ளது.

இது ஆண்டுதோறும் 10 மாதங்களுக்குத் தொடார்ச்சியாக வழங்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டளைப் பூஜை தொடர்ந்து நடத்துவதற்கு தென்காசி, ஆயம்பேட்டை, செங்கோட்டை, புளியறை, பண்பிளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலான இடங்களில் இருந்த சந்தைத் துறைகளிருந்து வரும் வரித்தொகை வழங்கப்பட வேண்டும்" என்று அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது என பேராசிரியர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: TNPSC Exam Date Change: மிக்ஜாம் புயல் எதிரொலி..! டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தேதிகளில் மாற்றம்..!

ABOUT THE AUTHOR

...view details