மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள தோப்பூரில் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கவுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதிக்கு பெங்களூரு - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கூத்தியார்குண்டு விளக்கிலிருந்து கரடிகல் வரையிலான ஒருவழிச் சாலையை, இருவழிச் சாலையாக மாற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுவருகிறது.
சுமார் 21.20 கோடி ரூபாய் செலவில் சுமார் 6.4 கிலோமீட்டர் தூரம் சாலையமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளுக்காக அந்தப் பகுதிகளில் உள்ள பல வகையைச் சேர்ந்த 167 மரங்கள் அகற்றப்பட்டன. இதற்குப் பொதுமக்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த மரத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர்.
இதனையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட மரங்களை பத்திரமாக வேறு இடத்தில் நட்டுவைப்பதாக அறிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பொக்லைன் இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட்ட மரங்கள் வேறொரு இடத்தில் புதிதாக குழிகள் தோண்டி அதில் நட்டுவைக்கப்பட்டது.
இதுவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குத் தகுதிவாய்ந்த மரங்கள் எனக் கணக்கிடப்பட்ட 125 மரங்களில் 27 தேசிய நெடுஞ்சாலைத் துறையால் கடந்த பிப்ரவரி மாதம் நடப்பட்டது. அவை அனைத்தும் குறைந்தது 40 முதல் 100 ஆண்டுகள் வரை பழமையான மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரங்கள் மாற்றியமைக்கப்பட்டு தற்போது மூன்று மாதங்கள் ஆன நிலையில் மரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான உரங்கள் அளிக்கப்பட்டு, தொடர்ந்து பெய்துவரும் கோடைமழை ஆகிய காரணங்களினால் 27 மரங்களிலும் இலைகள் தென்பட தொடங்கியுள்ளது. மரங்கள் வளரத் தொடங்கியதால் இரண்டாம் கட்டமாக 30 மரங்கள் மாற்றி அமைக்கப்படும் பணியானது தற்போது தொடங்கியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை: மாற்றிடத்தில் வைக்கப்பட்ட மரங்கள் புத்துயிர் பெற்றன! மாற்றிடங்களில் நட்டுவைக்கப்பட்ட மரங்கள் வளரத்தொடங்கியதால் சமூக செயற்பாட்டாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மரங்களை மாற்றி அமைக்கும் பணி, பராமரிக்கும் பணி ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத் துறை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இதையும் படிங்க :மீனாட்சி கோயில் அருகே துணிக்கடையில் தீ விபத்து