மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அதிமுக அரசின் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார்.
அதில், "பிரதமர் தினந்தோறும் இந்திய எல்லையில் சீனா ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசி வருகிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவருக்கு எதைப் பேச வேண்டும் என்றுகூட தெரியவில்லை. உண்டியல் போல மனுக்களைப் பெற பெட்டி வைத்துள்ளார். அந்த மனுக்களுக்கான தீர்வுகளை 100 நாட்களில் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். மனுக்களுக்கு தீர்வு காண சில வழிமுறைகள் உள்ளன. இவர் வந்த பிறகு நாட்டில் காகித பூ கூட மலர்ந்திடும், மணக்கும். ஆனால் திமுக நிச்சயமாக ஆட்சியமைக்க மக்கள் விரும்பமாட்டார்கள்.
மதுரை வந்த கனிமொழி ரேஷன் கடையில் தவறு நடப்பதாக கூறுகிறார். அங்கு தவறுகள் நடக்கத்தான் செய்யும். அவற்றை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கு தமிழ் தெரியாது, சட்டப்பேரவையில் ஆங்கிலத்திலே பேசுகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையின் திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்குத் தமிழ் தெரியவில்லை. அவர், கரோனா காலத்தில் வீட்டுக்குள்ளே பயந்து இருந்து விட்டார், டிஜிட்டல் முறையில் தான் பேசுவார். பொதுவாழ்க்கையில் மாலை மரியாதை கிடைக்கும்,சில நேரத்தில் கல்லெறியும் கிடைக்கும். அவற்றை பக்குவதுடன் ஏற்பவரே பொதுவாழ்க்கைக்கு வரவேண்டும்.
கனிமொழி மதுரை விஞ்ஞானி என்று என்னைக் கூறி வருகிறார். வைகையில் தண்ணீர் குறைந்து வருவதை கட்டுப்படுத்த வேண்டி ஆட்சியர், பொதுப்பணித்துறை அரசு அலுவலர்கள் வழங்கிய ஆலோசனைகளையே பின்பற்றினேன்" எனக் கூறியுள்ளார்.