மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள லேக் ஏரியா பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையாத நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால் சூப்பர் சரவணா ஸ்டோர் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளின் இரு புறங்களிலும் நிறுத்துகின்றனர்.
இதனால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சூப்பர் சரவணா ஸ்டோர் அருகில் மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், வெளியில் அதிகப்படியான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டிடப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எந்த விதமான அவசர கால வெளியேறும் வழிகள் இன்றி கட்டிடம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.