மதுரை: தமிழர்களின் விழாக்கால மாதங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஆடி. அம்மன் வழிபாடும், கோயில்களில் நிகழும் முளைக்கொட்டுத் திருவிழாவும் ஆடி மாதத்தின் தவிர்க்க முடியாத அம்சம் ஆகும். இந்த மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஒன்றாகத் திகழ்வதால், தமிழ்ப் பெண்கள் ஆடி வெள்ளிக் கிழமைகளை பெரும்பாலும் தவிர்ப்பதில்லை.
அதிலும், குறிப்பாக ஆடிப்பூரமான இன்று(ஜூலை 22) அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி, மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்வது தமிழ்ப்பெண்களின் மரபாகும். அத்தகைய வழிபாடுகளில் முக்கிய இடம் பெறுவது, வளையல். பல்வேறு வேண்டுதல்களோடு வளையல்களை நேர்த்திக் கடனாகச் செலுத்தி, அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபட்ட பின்னர், மீண்டும் அம்மனிடமிருந்து வழங்கப்படும் வளையல்களை அணிந்தால் எண்ணியவை நடைபெறும் என்ற நம்பிக்கை இன்றளவும் பெண்களிடம் நிலவுகிறது.
இதுகுறித்து கோவில் சிற்ப ஆய்வாளர் பேராசிரியை தேவி அறிவுச்செல்வம் கூறுகையில், ''மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான வாழ்விடப் பகுதியாகத் திகழ்வது, மதுரை. தாமரை மலரை ஒத்த மதுரையின் நடுப்பகுதியிலுள்ள மீனாட்சி அம்மன் கோவில் மொட்டாகவும், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு தெருக்கள் இதழ்களைப் போல் உள்ளதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதுபோன்ற ஒரு தெருதான், வளையல்காரத் தெரு. மேல ஆவணி மூல வீதியையும், மேல சித்திரை வீதியையும் இணைக்கின்ற இடத்தில் இத்தெரு அமைந்துள்ளது.
இங்கு கண்ணாடி வளையல் கடைகள் மிக அதிகமாக உண்டு. இங்கு மதுரை மக்களும், சுற்றுப்பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் தங்கள் இல்ல விஷேசங்களுக்கு இங்கே வந்து வளையல்களை வாங்கிச் செல்கின்றனர். இது அவர்களின் சம்பிரதாயமாக உள்ளது. ஒரு டஜன் வளையலாவது இங்கே வாங்கிச் சென்றால்தான் அனைத்தும் துலங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
சிவபெருமானின் திருவிளையாடற் புராணங்கள், மதுரையை மையமாகக் கொண்டு நடைபெற்றதாக ஐதீகம். அதில் ஒன்றுதான் வளையல் விற்ற, லீலை. இந்த லீலை இன்றைக்கும் ஆவணி மூலத் திருவிழாவின்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவின்போது வளையல் விற்ற லீலை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று அம்மன் சாமிகளின் பிறந்த தினமாக ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆடிப்பூரத்தின்போது தங்கள் பகுதி கோவில்களில் உள்ள அம்மன்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை பெண்கள் நடத்துகின்றனர். அதற்காக இந்த வளையல்காரத் தெருவிற்கு வந்து வளையல்களைப் பெற்று, தங்களது நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அந்த வளையல்களைப் பெற்று, தங்கள் கைகளில் அணிந்து செல்வது காலங்காலமாய் இருந்து வருகின்ற ஆன்மீக மரபு'' என்கிறார்.