மதுரை:மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே உள்ளது, பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகக் கட்டடம். இங்கு நில அளவைத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை ஒருவர், மது அருந்தும் கூடாரமாக மாற்றி, அலுவலக நேரத்திலேயே மது குடித்துவிட்டு, அங்கேயே மது பாட்டிலை உடைத்துப் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "அரசு அலுவலக வளாகத்தில் ஒருவர் மது அருந்தக்கூடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு நடத்தை விதிகளின் அடிப்படையில், அரசு அலுவலக வளாகத்தில் மது அருந்துவதோ, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதோ தவறு. இந்த வீடியோவில் ஒருவர் தன்னை அரசு அலுவலர் என்று குறிப்பிடுகிறார். பணி நேரத்தில் மது அருந்துகிறார். அதுமட்டுமன்றி அந்த பாட்டிலை அங்கேயே போட்டு உடைக்கிறார்.
அரசு அலுவலக வளாகத்தைக் கண்காணிக்கக்கூடிய அலுவலர்கள் என்ன செய்கிறார்கள்? பொதுமக்களில் சிலரும் இதுபோன்று அவ்விடத்தில் மது அருந்த முயன்றால், அரசு அனுமதிக்குமா? இதுபோன்ற அலுவலக வளாகத்தில் அரசு ஊழியரே மது அருந்தினால், பொதுமக்களுக்கும் அந்தத் துணிச்சலை ஏற்படுத்திவிடாதா? இதனால் சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகாதா?" எனக் கேள்விகளை எழுப்பினார்.