மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கடனுக்கு சிகரெட் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
மீண்டும் இரவு டீ கடைக்கு சென்ற குணசேகரன் இலவசமாக சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் பூமிநாதன் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன், டீ கடையை தீயிட்டு கொளுத்திவிடுவதாகக் கூறி பூமிநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர், இரவு 11 மணியளவில் மதுபோதையில் வந்த குணசேகரன் டீ கடையை தீயிட்டு எரித்ததாக கூறப்படுகிறது. குடிசை டீ கடை என்பதால் தீ மளமளவென கடை முழுவதும் எரிந்து நாசமாகியது. பின்னர், இது குறித்து தகவலறிந்து தனது கடைக்குச் சென்ற பூமிநாதன், கடை முழுவதும் எரிந்து கிடந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.