வினோத முறையில் வெள்ளப்பூண்டு திருட்டு.. பலே திருடன் சிக்கியது எப்படி? மதுரை: கீழமாசி வீதியில் பலசரக்கு கடைகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வெள்ளைப்பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகள் கடைகளின் வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இங்கு அடிக்கடி வெள்ளைப்பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகள் திருடுப்போவதாகப் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெண்கலக்கடைத் தெருவில் உள்ள ஒரு கடையில் செவ்வாய்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பூண்டு மூட்டையைத் திருடிச் சென்றுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் விரட்டிச் சென்று அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் லாவகமாக தப்பியோடியதாக தெரிகிறது.
சம்பவம் தொடர்பாக விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். திருடிய நபர் பயன்படுத்திய வண்டியின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது அவர் புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (42) என்பது தெரியவந்தது. இவர் மதுரை மாநகர் பகுதியில் இதுபோன்று வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை கடந்த சில மாதங்களாக விற்பனை செய்து வருவது தொடர்பாக ஏற்கனவே இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதனிடையே, கடையின் முன்பு வைத்திருந்த பூண்டு மூட்டையை லாவகமாக திருடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Southern Railway: கோவை - திண்டுக்கல் இடையே பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்!