மதுரை:கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பதோ அல்லது கடத்தலோ செய்கின்ற நபர்கள் மீது தென் மண்டல காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள 90 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் கூறியிருப்பதாவது, ’கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தொடர்பான நடவடிக்கைகளை தென் மண்டல காவல் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தென் மண்டலத்திலுள்ள 10 மாவட்டங்களில், நான்கு சரக காவல் துறை துணைத் தலைவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருவதுடன், குற்றவாளிகள் மற்றும் அவர்தம் உறவினர்களின் சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 494 வழக்குகளில் 813 வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 114 வழக்குகளில் 191 வங்கிக்கணக்குகளும், விருதுநகரில் 76 வழக்குகளில் 119 கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 கணக்குகளும், தேனியில் 81 வழக்குகளில் 146 கணக்குகளும், ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 கணக்குகளும், திருநெல்வேலியில் 14 வழக்குகளில் 22 கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 கணக்குகளும், தூத்துக்குடியில் 22 வழக்குகளில் 36 கணக்குகளும், கன்னியாகுமரியில் 59 வழக்குகளில் 91 கணக்குகளும் என மொத்தம் 494 வழக்குகளில் 813 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து தென்மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கர்க், கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் தொடர் நடவடிக்கையில் வழக்குப்பதிவு, கஞ்சா பறிமுதல், குண்டர் தடுப்புச்சட்டப்பிரிவின் கீழ் கைது நடவடிக்கை போன்றவை மட்டுமன்றி, குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் சொத்துகள் சட்டப்படி முடக்கப்படும் என்றும் மேற்கண்ட நடவடிக்கைகளில் தொடர்புடைய கஞ்சா மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்க செய்யப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:தேனியில் அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு - பதவி உயர்வு பறிபோனதால் ஆத்திரம்!