மதுரை:உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா நாள்தோறும் சுவாமியும், அம்மனும் சிம்மவாகனம், அன்ன வாகனம், தங்க குதிரை வாகனத்தில் என எழுந்தருளி கோயில் ஆடி வீதிகளில் பவனி வந்தனர்.
உலாவரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இந்த நிலையில் ஏழாம் நாளான இன்று அம்மனுடன் சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், மீனாட்சிஅம்மன் யாளி வாகனத்திலும் திருவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விஷேஷ பூஜைகள் செய்யப்பட்டன. கரோனா எதிரொலியாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் நிகழ்ச்சிகளை இணையதளத்தில் மட்டும் பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்து, கோயில் இணையதளம் மற்றும் யூ - டியூபில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
சித்திரைத் திருவிழா ஏழாம் நாள்