ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு புலம்பெயர்ந்தவர் மூதாட்டி கருப்பாயி (60). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரால் கைவிடப்பட்ட இவர், மதுரை அருகே அனுப்பானடி சிந்தாமணி சாலையில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தனது வாழ்க்கையை இன்றளவும் நடத்தி வருகிறார்.
யாருடைய ஆதரவும் இன்றி தனியாக தனது துயரம் நிறைந்த வாழ்க்கையோடு ஒவ்வொரு நாளும் வேதனை நிறைந்த பாதையில் பயணிக்கிறார். கழிவறை வளாகமே மூதாட்டிக்கு இன்றுவரை அடைக்கலமாக இருந்து வருகிறது.
மூதாட்டி கருப்பாயிடம் நமது செய்தியாளர் பேசிய போது, உறவினர் ஒருவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தேன் என்றார். மகளுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளும், தனது கணவர் இறந்து 17 ஆண்டுகளும் கடந்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.
முதியோர் உதவித்தொகைக்காக போராடிய ஏழை மூதாட்டி ஆதரவு இல்லாமல் போனதோடு தனது எஞ்சிய வாழ்க்கையை இந்த கழிப்பறை கட்டடத்தில் தொடங்கியதாக கூறிய அவர், கட்டணக் கழிப்பறைக்கு வருபவர்கள் அளிக்கும் சில்லறை தொகையை வைத்து இந்த வளாகத்தை பராமரிப்பதோடு தனது அன்றாட வாழ்க்கை தேவையையும் பூர்த்தி செய்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் உதவித் தொகைக்காக ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாகவும், இன்று வரை அதற்காக போராடி வருவதாகவும் கூறினார்.
மூதாட்டி கருப்பாயி நிலையை உணர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது பற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, தற்போது இவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வருவாய் ஆய்வாளர் உறுதியளித்துள்ளார்.
அன்றாட பிழைப்புக்காக அவலம் நிறைந்த வாழ்க்கையை நடத்திவரும் இந்த ஏழைத் தாய்க்கு இன்று விடிவுகாலம் பிறந்துள்ளது. 20 ஆண்டுகால பெருந்துயர் வாழ்க்கை இனி சிறிய புன்னகையோடு கடந்து செல்லும் என எதிர்பார்க்கலாம்.