ரகளை செய்த சிறார்கள்: மதுரை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை - மதுரை சிறார்கள்
மதுரை: சீர்திருத்த பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட 18 சிறுவர்களை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ளது சிறுவர் சீர்திருத்தப்பள்ளி. இதில் 36 சிறார் குற்றவாளிகள் தங்கி பயின்று வருகின்றனர். இவர்களில் சிலர் தங்களை பிணையில் விடுவிக்க கோரி நேற்று ரகளையில் ஈடுபட்டனர்
இதனால் அங்கு உள்ள 36 சிறார் குற்றவாளிகளிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரைை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனிடையே சீர்திருத்த பள்ளி வளாகத்தில் இருந்த மின்விளக்கு, தொலைக்காட்சிப் பெட்டி, கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இவை அனைத்தும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலானவை.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் விசாரணை மேற்கொண்டார் . ரகளையில் ஈடுபட்டதாக 18 சிறார் குற்றவாளிகள் மீது சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் ஷகிலா பானு அளித்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் 18 பேர் மீதும் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் 18 சிறார்களும் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சீர்திருத்த பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.