தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பன்றி குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு.. சிற்பத்தின் வரலாறு என்ன?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 4:35 PM IST

மதுரையில் கி.பி 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை: திருமங்கலம், ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர், எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனைப்படி, முதல்வர் அப்துல் காதிர் வழிகாட்டுதலில், வரலாற்றுத்துறை தலைவர் மணிமேகலை, பேராசிரியை இருளாயி, மாணவர் கல்லாணை ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களது கள ஆய்வில் வெள்ளையன்பட்டியிலிருந்து முடுவார்பட்டி செல்லும் வழியில் தனியார் விவசாய பகுதியில் கி.பி., 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வரலாற்றுத்துறை தலைவர் மணிமேகலை கூறியதாவது, “இன்றைய தமிழ் சமூகத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருக்கிறது. பரந்து விரிந்து காணப்பட்ட காடுகளை அழித்து, விவசாயம் செய்ய உகந்த நிலமாக மாற்றினார்கள். குறிப்பாக அலங்காநல்லூர் பகுதியில் விவசாயம் அதிக முக்கியத்துவம் பெற்று காணப்படுகிறது.

பன்றிக் குத்திப்பட்டான் கல் என்பது அக்காலத்தில் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து காட்டுப் பன்றிகள் விளை பொருள்களை சேதப்படுத்தி வந்தன. அந்தக் காட்டுப்பன்றிகளிடம் இருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க போர் வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதில் ஒரு வீரன், ஊருக்கு துன்பம் விளைவித்து வந்த காட்டுப்பன்றியை அழிக்கும் நோக்குடன் பன்றியுடன் சண்டையிட்டார். அப்போது அந்த பன்றியும், வீரனும் இறந்திருக்கக் கூடும். இது போன்ற வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் நடுகல் எடுக்கும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது. பன்றி தாக்கி இறந்ததால், பன்றிக் குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படுகிறது.

பன்றிக் குத்திப்பட்டான் கல்:இவ்வாறு கண்டறியப்பட்ட நடுகல் 3 அடி உயரமும் 1 ½ அடி அகலமும் கொண்டவை. இவ்வீரனின் தலை மீது கொண்டையும், காதில் குண்டலங்களும், இடுப்பிற்கு கீழ் ஆடை அணிந்து உள்ளான். காதுகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அணிந்துள்ளனர். கரங்களில் மேலிருந்து கீழாக இரண்டு இடங்களில் பூணூலாக அணிந்துள்ளார். இடையில் சிறு குறு வாளுடன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

வேட்டை நாய் சிற்பம்:பன்றிக் குத்தப்பட்டான் நடுகல், வீரன் சேர்ந்து வேட்டை நாய் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை ஆராய்ந்து பார்த்தால் வேட்டைநாய் பன்றியோடு போராடி உயிர் பிரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அதனால் தான் வீரன் மற்றும் வேட்டை நாயின் வீரத்தை பறைசாற்றும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இச்சிற்ப வடிவமைப்பை பொறுத்தமட்டில் கிட்டதட்ட 600 ஆண்டுகள் பழமையான சிற்பம் என கருதலாம். தற்போது இவ்வூரில் வாழும் மக்கள் குலதெய்வங்களாக இந்த சிற்பங்களை வணங்கி வருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க:மதுரையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு! கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது கிடைத்த பொக்கிஷம்!

ABOUT THE AUTHOR

...view details