ஒருவர் துன்பப்படுவதை ரசிக்கும் மனநிலைக்கு மனிதன் வரும்போதே அவனிடமிருந்த மனிதம் செத்துவிட்டது என்றே பொருள் கொள்ளலாம். அடி வாங்கிக் கொண்டிருக்கும் வடிவேலுவின் காமெடியை ரசிக்கும் மனநிலையை இதன்கீழ் வரையறுக்கலாம். இந்த மனநிலைதான் மிருகங்களை வதைக்கும்போதும் மனிதர்களைச் சலனப்படுத்துவதில்லை.
கிருஷ்ணகிரி பாப்பாரபட்டி பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் என்பவர் ஆசையாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை பலியானதற்கும், இந்த மனநிலை முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. இவர் வளர்த்த காளை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற எருதாட்டம், ஆந்திரா, கர்நாடகா ஆகி்ய மாநிலங்களில் நடைபெறும் போட்டிகள் என அனைத்திலும் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜூன் 6) இந்தக் காளை திடீரென உயிரிழந்துவிட்டது. ஆசை ஆசையாய் வளர்த்த காளை உயிரிழந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், முறையான இறுதிச்சடங்குகளை அவர் செய்து முடித்தார். ஆக்ரோஷம் அதிகரித்து மரத்தில் முட்டி முட்டி தானாகவே காளை உயிரிழந்திருக்கும் என தன் மனதையும் ஆறுதல்படுத்திக் கொண்டார்.
ஆனால், இதற்கு மாறாக தற்போது அமைதியாக நின்ற காளையை இளைஞர் ஒருவர் ஆக்ரோஷப்படுத்தும் காணொலி சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. அக்காணொலியில், போதையில் இருக்கும் இளைஞர் லோகேஷ் காளையைச் சீண்டுகிறார். இதனால் ஆக்ரோஷமடையும் காளை மரத்தில் மோதுகிறது.
லோகேஷை தாக்க முயலும் காளை மரத்தில் மோதும்போது, அதன் கொம்புகள் மரக்கிளையில் சிக்குகின்றன. தொடர்ந்து பலத்த காயமடையும் காளையின் மூக்கிலிருந்து ரத்தம் சொட்டுகிறது. ரத்தம் சொட்ட சொட்ட காளை மயங்கி விழுந்தபின், போதையிலிருந்த அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.
காளையைத் துன்புறுத்தும் இளைஞர்கள் இதன் பிறகுதான் காளையை வளர்த்தவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். ஆனால், இதுகுறித்து அறியாத அவர் காளையை நல்லடக்கம் செய்தார். கடந்த மாதம் கேரளா மாநிலத்தில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, தமிழ்நாட்டில் காளை, போதை இளைஞர் ஒருவரின் மிருகக் குணத்திற்குப் பலியாகியுள்ளது. சிறு உயிரைக் கொல்லத் துணியும் எவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே விலங்குகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 'மாளிகையின் நிறத்தை மாற்றி, ஒரு பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்'