கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சானமாவு வனப் பகுதியில் கடந்த மார்ச் 19ஆம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதுமாக எரிந்ததால், உயிரிழந்தவர் யார் எனத் தெரியாமல் உத்தனப்பள்ளி காவல் துறையினர் குழம்பினர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில், வனப் பகுதியில் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தவர், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் பிரகாஷ் (43) என்பதும் தெரிய வந்துள்ளது.
அதேநேரம், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரகாஷை காணவில்லை என ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போதுதான், எரிந்த நிலையில் உயிரிழந்த பிரகாஷ் மனைவி லட்சுமி (36) என்பவர்தான், தனது கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. முதலில், பிரகாஷின் உயிரிழப்புக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி வந்த லட்சுமி, காவல் துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
போலீசாரின் விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபரான பிரகாஷுக்கும், லட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும், பள்ளிப் பருவம் முதலே பழகி, காதல் செய்து வந்த சின்னராஜ் (38) என்பவர் உடன் திருமணத்துக்குப் பிறகும் உறவு இருந்து வந்துள்ளது. சரக்கு வாகன ஓட்டுநரான சின்னராஜ் உடன் லட்சுமி அடிக்கடி செல்போன் மூலம் பேசி உறவிலே இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, பிரகாஷ் அதிக குடி பழக்கம் உள்ளவர் என்பதால், அடிக்கடி பிரகாஷுக்கும் லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதிலும், லட்சுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லையும் பிரகாஷ் கொடுத்து வந்துள்ளார். இதனால் லட்சுமிக்கு பிரகாஷின் மீது மெல்ல மெல்ல வெறுப்பு வரத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதி அன்றும், பிரகாஷ் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த லட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த லட்சுமி வீட்டில் இருந்த கட்டையால் பிரகாஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த பிரகாஷ், அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த லட்சுமி, தனது முன்னாள் காதலன் சின்னராஜுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி உள்ளார். இதனையடுத்து சின்னராஜ், லட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர், இருவரும் சேர்ந்து பிரகாஷின் உடலை மறைப்பதற்காக, அவரது உடலை எடுத்துக் கொண்டு சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து, சானமாவு வனப் பகுதிக்கு வந்த அவர்கள், யாரும் அங்கு இல்லாததை உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கேயே பிரகாஷின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
உடலை அழித்து விட்டதால், தாம் தப்பித்து விட்டோம் என்ற நினைப்பில் இருந்த லட்சுமியும், அவரது முன்னாள் காதலன் சின்னராஜும் காவல் துறையினரின் தீவிர விசாரணையில் தற்போது சிக்கி உள்ளனர். இதனையடுத்து லட்சுமி மற்றும் சின்னராஜ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், இருவரும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஆதம்பாக்கத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை