பெங்களுருவில் முழு கடையடைப்பு கரூர்:காவிரியில் தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24ஆயிரம் கனஅடி நீரை வேண்டும் என கேட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி நீரைத்தான் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில், உச்ச நீதிமன்றமும் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
தற்போது நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் நாளை (செப்.26) முழு கடையடைப்பையொட்டி 430 தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
அதனையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்பட்டது. இது குறித்து அரசு போக்குவரத்துறை அதிகாரி கூறும்போது, “பெங்களுருவில் நடைபெறும் முழு கடையடைப்பையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் இரவு 8 மணி வரை நிறுத்தப்பட்டது.
இதில், சேலம் கோட்டத்தில் 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் 80 பேருந்துகள் என 430 பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்குச் செல்லாது. அதேபோல், பெங்களூரு சென்றுள்ள பேருந்துகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் தமிழ்நாட்டிற்கு திருப்பி கொண்டு வரப்படும். அதேபோல் பல்வேறு பணிகளுக்கு பெங்களூர் சென்றுள்ள தமிழர்கள் மீண்டும் தமிழ்நாடு வருவதற்கு வசதியாக நகர் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான ஜூஜூவாடி வரை சென்று பயணிகளை அழைத்து வரப்படும்” என கூறினார்.
இதையும் படிங்க:"நன்றி மீண்டும் வராதீர்கள்" பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக!