தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராகி எனப்படும் கேழ்வரகு சாகுபடியில் முதலிடம் வகித்து வருகிறது. இங்கு 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் கேழ்வரகு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமல்லாது வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி, ஆகிய வட்டங்களில் பெருமளவில் ஆரியம் எனப்படும் ரகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகம் நெற்கதிர் போன்று நாற்று நட்டு சாகுபடி செய்யப்படும் ரகமாகும்.
தற்போது ஆரியம் ரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு கதிரின் குலைகளை அழிக்கிறது. எனவே முற்காலத்தில் மானாவரியாக விளைவிக்கப்பட்ட இப்பயிர் இப்போது பாசன முறைக்கு மாறி உள்ளது. எனவே நோய்,மருந்தற்ற விவசாய முறை இங்கு அழிந்துவருகிறது.பாசன முறையில் சாகுபடி செய்து வரும் கேழ்வரகிற்கு தற்போது மழை பொய்த்துப் போனதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வைரஸ் தாக்குதலால் கேழ்வரகு சாகுபடி வீழ்ச்சி இது குறித்து விஜயா என்ற பெண் விவாசாயி கூறுகையில், கேழ்வரகு பயிர்கள் மழைக்காக வாடி வதங்கி நிற்கிறது. தற்பொழுது கிணற்று நீர் பாசனம் என்பது அவ்வளவு சரியான முறையில் இல்லை. காரணம் தற்போது இங்கு வறட்சி நிலவி வருகிறது. இதனால் கதிர் பெரியதாக இல்லாமல் சிறிய அளவாக மாறியுள்ளது என்றார்.