கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணியின் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிருஷ்ணகிரி மாவட்டமானது கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றின் முக்கிய தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார். குறிப்பாக கிருஷ்ணகிரி-பெங்களூரு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறிய அவர், இதற்கு எட்டு வழிச் சாலை அமைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காவிரியிலிருந்து விடப்படும் தண்ணீர் ஒரு பகுதிக்கு மட்டும் செல்கிறது. இதனை மற்ற பகுதிக்கும் செல்லும் வகையில் கால்வாய் அமைத்து, விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த மக்களின் எண்ணம் தற்போது மாறியுள்ளதாகக் கூறிய ஜி.கே. மணி அதிமுக கூட்டணி நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார். மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளதை வரவேற்று, வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.