கிருஷ்ணகிரி: ஓசூர் அரிமா சங்க உறுப்பினரும், மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் துணைச் செயலாளருமான ஹம்ரேஷ் என்பவரது மனைவி ஹேமாவதி (வயது 39). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹேமாவதி கடந்த 25ஆம் தேதி தீராத தலைவலி காரணமாக ஓசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் ஹேமாவதியை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு மூளையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்த போது ஹேமாவதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
ஹேமாவதியின் உடல் உறுப்புக்களை கணவர் மற்றும் பிள்ளைகள் தானமாக வழங்க முன்வந்த நிலையில், அவரின் சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகிய உறுப்புகள் 6 பேருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. முன்னதாக, தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.