நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் அரசு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர்.
இப்பள்ளியில் கணிணி பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கில வழிக்கல்வி, யோகா பயிற்சி, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு கலைகளும் பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றன.
தனியார் பள்ளி மாணவர்களே அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது இப்பள்ளி. அரசுத் திட்டங்களை மட்டுமே எதிர்பார்த்திராமல் கிராம நிர்வாகிகள், கிராம மக்கள் இணைந்து உருவாக்கிய கல்விக் குழு மாணவர்களின் பல்வேறு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துவருகிறது. ஆண்டில் மூன்று மாதம் மட்டுமே அரசால் வழங்கப்பட்ட தற்காப்புக் கலை பயிற்சியை தலைமை ஆசிரியர், கிராம மக்களின் முயற்சியால் ஆண்டு முழுவதும் பயிற்றுவிக்கப்படுகிறது.
அதன் விளைவாக, இப்பள்ளி மாணவ-மாணவிகள் மூன்று பேர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று விளையாடினர். அதற்கான செலவுளை கிராம கல்வி குழுவினரே ஏற்பாடு செய்தனர்.