உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிருஷ்ணகிரி:தமிழகம் - கர்நாடக எல்லையான பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் பாலாஜி கிராக்கர்ஸ் என்ற பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (அக்.7) மாலை பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, இந்த தீ விபத்தில் கடையில் பணியாற்றிய 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அவர்களது உடல்கள் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த தீ விபத்தில் 12 பேர் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (அக்.8) உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த நவீன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகிய மூவரும் பெங்களூரு மாடிவாலா பகுதியில் உள்ள செயிண்ட் ஜான்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் சஞ்சய், சந்துரு, ராஜேஷ், பால் கபீர் ஆகிய நான்கு பேரும் பலத்த காயம் ஏற்பட்டு அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.7) விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் என முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “நேற்று நடத்த பட்டாசு கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 12 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் அடையாளம் காணும் பனியானது நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் நேரில் பார்வையிட்டுள்ளோம். உயிரிழந்த குடும்பத்திற்கு 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது” என தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் சிலர் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும், பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்” என தெரிவித்தார். இந்நிகழ்வின்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:"தெரு தெருவாக, வீடு வீடாக சோதனையிட்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" - இஸ்ரேல் பிரதமர்!