கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தையில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை சில்லறை மாற்றம் செய்ய நபர் ஒருவர் வந்துள்ளதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர், அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்நபர் தர்மபுரி மாவட்டம், பள்ளக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தருமன் என்பதும் ஓசூர் எழில்நகர் பகுதியில் அவர் வசித்து வரும் வீட்டில் கள்ளநோட்டுக்களை அச்சிட்டதும் தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்ததில், கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை சட்டவிரோதமாக அவர் அச்சிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.