கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊத்தங்கரை, கல்லாவி, போச்சம்பள்ளி, திப்பனூர், களர்பதி, மலையாண்டள்ளி, சோனாரள்ளி, ஆனந்தூர், திருவணப்பட்டி, மத்தூர், சானிப்பட்டி, கவுண்டனூர், புளியாண்டப்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.
இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பனை சார்ந்த தொழில்களையே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை சீசன் என்பதால், பனை சார்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் சீசன் இல்லாத காலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.
தற்போது பனை சீசன் தொடங்கியுள்ளதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி பனைவெல்ல உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக இந்த மாதத்தில், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கிருஷ்ணகிரி பகுதியில் செய்யப்படும் பனை வெல்லத்தை வாங்கிச் செல்வார்கள்.