கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டை பகுதியில் இயங்கி வந்த பட்டாசு சேமிப்பு கிடங்கில் இன்று(ஜூலை 29) காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், குடோனில் பணியில் இருந்த சிலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.
கரும்புகையுடன் இருந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இடுபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி (45), அவரது மனைவி ஜெயஸ்ரீ (40), ரித்திகா (17), ரித்தீஷ் (15), இப்ரா (22), சிம்ரன் (20), சரசு (50), ராஜேஸ்வரி (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:வங்கக் கடலில் சிக்கி தவித்த 36 தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!
வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 முதல் இயங்கி வரும் இந்த பட்டாசு குடோனானது ஆண்டுதோறும் முறையாக உரிமையாளர் மூலம் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் சாலையில் நடந்துச் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போருக்கு தலா ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிவராஜ்(வயது 24) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து!