கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாக 2020-21ஆம் ஆண்டுக்கான அகழாய்வு கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை பகுதியில் புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்கால பண்பாட்டினை கண்டறியும் பொருட்டு அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெருங்கற்காலத்திற்கு சான்றாக கற்பதுக்கை ஒன்று அகழாய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறும்போது, "இந்தக் கல்பதுக்கையில் உள்ள தொப்பி கல்லானது சுமார் 3.88 மீட்டர் வட்ட வடிவிலான அளவுடையது. அதனை அப்புறப்படுத்திவிட்டு கற்பதுக்கை அகழாய்வு செய்யும்போது அதனுடைய நீள அகலம் அதிகபட்சமாக கிழக்கு மேற்காக 2.80 மீட்டரும். வடக்கு தெற்காக 2.5 மீட்டரும் இருந்தது. கற்பதுக்கை கிழக்குப் புறமாக 57 சென்டிமீட்டர் அளவில் தமிழ் எழுத்து "ப வடிவில் அமைந்துள்ளது.
கற்பதுகையின் உள்பகுதியை அகழும் போது அதனுடைய அதிகபட்ச ஆழம் 1.42 மீட்டர் ஆக இருந்தது அதே ஆழத்தில் கீழ்வரும் ஈமச்சின்ன இடுபொருட்கள் கிடைத்தன. மூன்று கால்கள் உடைய ஐந்து சுடுமண் குடுவைகள் கிடைத்தன. அவை நீளம் 23 சென்டிமீட்டர் முதல் 30 சென்டி மீட்டர் வரையிலும் அகலம் 14 சென்டிமீட்டர் முதல் 17 சென்டி மீட்டர் வரையும் கிடைத்துள்ளது. நீள அகலம் முறையே 14. 15 சென்டிமீட்டர் அளவில் சிகப்பு வண்ண மண் பாணை ஒன்று கிடைத்துள்ளது.