கிருஷ்ணகிரி:அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்த நிலையில், விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு கடைகளை அமைத்ததை தடுக்கத் தவறியதாக ஆனேக்கல் தாசில்தார் ஸ்ரீதர் மாடல்லா, துணை வட்டாட்சியர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாகேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் - கர்நாடகா மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் ராமசாமி ரெட்டி என்பவரது மகன் நவீன் நடத்தி வந்த பட்டாசு கடையில் கடந்த அக்.7ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பட்டாசுகளை ஏற்றிக் கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் டாடா ஏஸ் வேன் ஆகியவை முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகின. இந்த பயங்கரமான சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு அளித்த தகவலின் படி, அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை அணைத்ததோடு, போலீசாரின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கோலார் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.