தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களையும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், பதிவேடுகளையும் தேர்தல் பார்வையாளர் டி.ஆப்ரகாம் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், புகார் தெரிவித்த சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்கவும் செய்தார். பின்னர் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான பர்கூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் , ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சு.பிரபாகருடன் சேர்ந்து தேர்தல் பார்வையாளர் டி. ஆப்ரகாம் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்வையாளர் டி. ஆப்ரகாம் , ' கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27.12.2019 அன்று தளி, ஓசூர் காவேரிப்பட்டிணம், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய 5 ஒன்றியங்களில் முதற் கட்டமாகவும், 30.12.2019 அன்று கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய 5- ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாகவும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04343-233333 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.