கிருஷ்ணகிரி: கன்னட மொழியில் கடந்தாண்டு உருவான காந்தாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமான வருவாயை வசூலித்து வெற்றி பெற்றன. மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் காந்தாரா திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் ஆண்டுதோறும் சினிமா திரைப்படங்களை மையமாக கொண்டு செட் அமைத்து பிரம்மாண்டமான முறையில் விநாயகர் சதுர்த்தியை பலரும் வியக்க வைக்கும் வகையில் கொண்டாடுவது வழக்கம். இதுவரை பாகுபலி, அத்திவரதர், KGF உள்ளிட்ட விநாயகர்களை அமைத்திருந்த நிலையில் இந்தாண்டு காந்தாரா திரைப்படத்தை மையமாக கொண்டு விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு பற்களை கொண்ட (வராஹா ரூபம்) ராட்சத பன்றியின் முன்னங் கால்களுக்கு இடையே நுழைந்து செல்வது போல பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைத்து இருந்தனர். அந்த நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் படிகட்டுகளில் அமர்ந்து 10 அடி உயரத்தில் பஞ்சுருளி தேவன் இரண்டு கைகளிலும் தீப்பந்தம் கையில் ஏந்தி மிரட்டுவது போல் செட் அமைக்கப்பட்டுள்ளன.