ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராம ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில், ராம்நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நிறுவன பொதுச் செயலாளர் க.மா. இளவரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம், இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது, தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு எதிராக நடைபெற்று வரும் இதுபோன்ற ஊர் கவுண்டர் என்ற பெயரில் ஏதேச்சதிகாரம் செய்து, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்மணி கிருஷ்ணவேணி கோவிந்தன் என்பவர் தெரிவித்ததாவது, "சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாரண்டபள்ளி கிராமத்தில் எனது கணவருடன் நான் வசித்து வந்தேன். அவர் உயிரிழந்த நிலையில், எனது குழந்தைகளின் மேல்படிப்பிற்காக பெங்களூருக்கு சென்று குடியேறினேன். பின்னர் எனது சொந்த ஊரான இந்த கிராமத்திற்கு வந்த பொழுது நான் இந்த ஊரில் பிறக்கவில்லை என்று கூறி ஊர் கவுண்டர் தலைமையில் என்னை தள்ளி வைப்பதோடு எங்கள் உறவினர்களிடமும் பேசக்கூடாது என கூறி ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் ஒதுக்கி வைத்து உள்ளனர்.
மேலும் எங்கள் குடும்பத்தில் உள்ள சில பிரச்சனைகளை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இதனை ஓர் பிரச்சினை ஆகவும் மற்றும் ஏழு ஊர் கிராம பிரச்சினையாகவும் மாற்றி திரித்து, எனக்காக ஆதரவு தெரிவிக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இதுபோன்ற ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டப்பஞ்சாயத்தால் ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து அவர்களுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கவோ அல்லது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கும் ஊர் கவுண்டர் மேலும் பண்டிகை காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி அவ்வாறு தொடர்பு கொண்டால் அபராத பணம் கட்ட சொல்லி வசூலித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை காவல் நிலையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் குறை தீர்க்கும் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இலலாமல் எங்கள் குடும்பத்திற்கு யாரும் உதவி செய்யக்கூடாது. அப்படி உதவி செய்தால் அவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.