ராயக்கோட்டை: தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில், பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தது. இன்று (ஏப்ரல் 21) அதிகாலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சென்ற போது ரயிலின் 3 முதல் 8வது பெட்டி வரை, தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டன. இதனால் பெங்களூரு வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: சேலம் - யஸ்வந்த்பூர் (16212), தருமபுரி - பெங்களூரு (06278), பெங்களூரு-ஜோலார்பேட்டை (06551), ஜோலார்பேட்டை - பெங்களூரு (06552) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருசில ரயில்கள் தருமபுரி - ஓசூர் வழித்தடத்துக்கு பதிலாக ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் - சேலம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மற்றொரு ரயில் விபத்து:இந்நிலையில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு, 57 பெட்டிகளில் கோதுமை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மகேந்திரவாடி ரயில் நிலையத்துக்கு காலை 6.40 மணிக்கு ரயில் சென்றது. அப்போது, கார்டு பெட்டி தடம் புரண்டது. இதை உணர்ந்த கார்டு, ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து ஜோலார்பேட்டையில் இருந்து ஹைட்ராலிக் இயந்திரம் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டு, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இப்பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். லூப் லைனில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலை ஆக்கிரமிப்பு தகராறு; ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகியை சுற்றி வளைத்த பொதுமக்கள்! திருச்சியில் நடந்து என்ன?