கிருஷ்ணகிரி:ஓசூர், தேர்ப்பேட்டையைச் சேர்ந்தவர், சேகர் (26). பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உணவகத்தில் இன்று சாப்பிட சென்றபோது, அங்கு தகராறு ஏற்பட்டு அங்கிருந்த பொருட்களை எடுத்து போட்டு உடைத்தார். இதை அறிந்த ஓசூர் நகர போலீசார் சேகரை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தலையில் பலமாக கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்த சேகர், தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சிகிச்சை செய்து கொள்ளமாட்டேன் எனக் கூறி, தலையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தேன்கனிக்கோட்டை பிரதான சாலையில் அமர்ந்து 15 நிமிடங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.