கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில், இன்று (ஏப்ரல் 15) அதிகாலை தனது மகன் மற்றும் தாயை வெட்டி கொலை செய்த தந்தை தண்டபாணியை தேடி வந்த தனிப்படை காவல் துறையினர், இன்று மாலை அவரை கைது செய்தனர். முன்னதாக கொலை சம்பவத்தை நிகழ்த்திய தண்டபானி, ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில், ஈமச்சடங்கு செய்யும் தென்பனையாற்றில், மகன் மற்றும் தாய் உயிரிழந்ததற்காக தலைமுழுகி உள்ளார்.
பின்னர் அங்கு இருந்து மேல் தீர்த்தம் பெற, தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை பகுதிக்குச் சென்று தீர்த்தம் ஆடி உள்ளார். இதனையடுத்து அங்கு இருந்த வனப் பகுதியில் சுற்றி வந்த தண்டபாணி, தன்னைத் தானே கழுத்துப் பகுதியில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஊத்தங்கரை காவல் நிலையம் நோக்கி வந்த நபர் (தண்டபானி), புதிதாக கட்டிய காவல் நிலையத்தை தெரியாமல், ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளார்.