கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேவுள்ள புளியண்டபட்டி கிராமத்தில் குறவர் இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஐயப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இது குறித்து ஆந்திர மாநில காவல் துறையினர் ஐய்யப்பன், அவரது தாயார் கண்ணம்மாள் மற்றும் உறவினர் அருணா, 7 வயது குழந்தை உள்பட நான்கு பெயரை கடந்த ஜுன் 11 ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சத்யா என்பவர் ஆன்லைனில் புகார் மனு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆத்திர மாநில காவல் துறையினர் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி இரவு 15 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு, ஹார்டு டிஸ்க்கை எடுத்துக் கொண்டு பின்னர் சத்யா, ரமேஷ், ரேணுகா, அருணா, பூமதி மற்றும் ஆறு வயது குழந்தை உள்பட ஆறு பேரை அழைத்துச் சென்று, சாதி குறித்து பேசியதாகவும் பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி சித்திரவதை செய்தது, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு குறவினர் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட குறவர் மக்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழ்நாடு காவல் துறையினர் மற்றும் ஆந்திர காவல் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, இரண்டு குழந்தை உள்பட எட்டு பேரை விடுவித்தனர். மேலும், விசாரணைக்காக ஐயப்பன் மற்றும் அவரது மனைவி பூமதி ஆகிய இரண்டு பேரையும் அங்கே காவலில் வைத்ததாக தெரிகிறது.