கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், அவரது மனைவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மருத்துவர், ஒரு வார விடுப்பில் கிருஷ்ணகிரிக்கு வந்து ஒரு வார காலம் தனது வீட்டில் தங்கி அருகில் உள்ள கடைகள், உழவர் சந்தைகளுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து விழுப்புரம் சென்ற அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள அவரது மனைவி, உறவினர்கள், அருகில் உள்ள 11 நபர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மாநில சுகாதாரத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சோதனை முடிவில் மேற்கண்ட 11 நபர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரது மனைவி கடந்த நான்கு நாட்களாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை வார்டில் மருத்துவ பரிசோதனை செய்த நோயாளிகள் குறித்தும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வீடுகளில் வைரஸ் தொற்று குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.