கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட உளியாளம், மாரசந்திரம், சென்னசந்திரம், கெம்பசந்திரம், காலஸ்திபுரம் என 6 கிராமங்களில், 1961ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்திய பிறகும் கூட, இக்கிராமங்களில் பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த கிராமங்களில் உரிய பட்டா பெறாமல் ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கர் பைமாசி நிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கிட, தனி டிஆர்ஓ தலைமையில் நில வரித்திட்ட அலுவலகம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதுவும் 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற போதிலும் பட்டா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று சுதந்திர தினத்தையொட்டி சென்னசந்திரம் கிராமத்தில் கிராம சபை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கிராம சபையில் பங்கேற்க ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர், விஏஓ, அரசு பள்ளி தலைமையாசிரியர், மின்வாரிய ஊழியர், காவல்துறை என அனைத்து துறை சார்பிலும் அரசு ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் தங்களுக்கு பட்டா வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதை எதிர்க்கும் விதமாக கிராம மக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படு இருப்பதாகவும் கூறி, கிராம மக்களை கூட்டத்தில் பங்கேற்க அழைத்தபோதும், எத்தனை ஆண்டுகளானாலும், பட்டா வழங்கும் வரை கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.