தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை.. தொண்டர்களும் தலைவரே.. கிருஷ்ணகிரியில் ஜே.பி.நட்டா.. - ஜே பி நட்டா தமிழ்நாடு வருகை தேதி மார்ச் 10 2023

தமிழ்நாட்டில் புதியதாக 10 பாஜக அலுவலகங்களை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 10, 2023, 7:16 PM IST

கிருஷ்ணகிரி:தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 10 பாஜக அலுவலகங்களை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மார்ச் 10) திறந்து வைத்தார். அப்போது, 'பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான திட்டங்களால் எதிர்க்கட்சியினர் வலுவாக இருந்தபோதும், நான்கு மாநில தேர்தல்களில் பாஜக வென்றது. அதேபோல தமிழ்நாட்டிலும் பாஜக வெல்லும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. தொண்டர் கூட தலைவராக முடியும் எனத் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரபள்ளி என்னும் இடத்தில் கட்டப்பட்ட மாவட்ட பாஜகவின் புதிய அலுவலக கட்டடத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏனைய பகுதிகளான தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, உள்ளிட்ட 9 இடங்களில் கட்டப்பட்ட புதிய பாஜக அலுவலகங்களையும் அவர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன்பின்னர் நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிய ஜே.பி.நட்டா, 'தமிழ்நாட்டிலும் நிச்சயம் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். ஏறத்தாழ 18 கோடி என்ற வகையில் உலகளவில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. பிரிவினை இன்றி வளர்ச்சி, பொருளாதாரம் என்னும் நோக்கில் மட்டுமே நாங்கள் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம். பாஜக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கிய இருக்கிறோம். உலகின் மற்ற நாடுகளில் இருந்து 94 சதவீத செல்போன்கள், மருந்துகள், ஆட்டோ மொபைல் உள்ளிட்டவையை இறக்குமதி செய்து வந்த இந்தியா, தற்போது 97 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கும் வகையில் வளர்ந்து இருக்கிறது.

தமிழையும் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டையும் பிரதமர் மோடி உலகளவில் கொண்டு செல்வதில் தனி ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள், நிதியுதவி, அதிகாரம் வழங்குவதில் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு மாநில கட்சிகள் அல்லது தேசிய கட்சிகளாகட்டும் வாரிசு என்பது இல்லாமல், தொண்டர்களும் தலைவர்களாகும் கட்சியாக பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆகவே மக்களின் ஆதரவைப் பெற்று இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி அமைய தொண்டர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 'பாஜக என்பது தியாகத்தால் உருவான கட்சி ஆகும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு வழங்கி உள்ளது. ஆகவே, அந்த திட்டங்களை மக்கள் இடத்தில் கொண்டு செல்வதில் பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பாஜக சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நைனார் நாகேந்திரன், தமிழக இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் விருப்பத்தின் பேரில் தமிழ்நாடு அரசு.. பாஜக உடன் மு.க.ஸ்டாலின் மறைமுக உறவு.. கி.வெங்கட்ராமன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு..

ABOUT THE AUTHOR

...view details