கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளியில் ரூ.168 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 230/110 கிலோவாட் ஆயிரமாவது துணைமின் நிலைய சோதனை மின்னூட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். விழாவில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் உடனிருந்தார்.
ஆயிரமாவது துணைமின் நிலையத்தின் சோதனை மின்னூட்டம் தொடக்கம்! - சோதனை மின்னூட்டம்
கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளியில் ரூ.168 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயிரமாவது துணைமின் நிலைய சோதனை மின்னூட்டத்தை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, “தமிழ்நாட்டில் மின்வெட்டு என்கிற பேச்சுக்கே இடமில்லை, சில இடங்களில் மட்டும் இயற்கை சீற்றத்தால் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத அளவிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாற்றியமைக்கப்பட்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒருமாதத்திற்கு முன்பாக தொடங்கப்பட்ட காற்றாழை மூலமாக ஒருநாளைக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அதனால் அணுமின் நிலையம் பராமரிக்கும் பணி ஒவ்வொன்றாக தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் 800 மெகாவாட் மின்நிலையம் தொடங்கப்படவுள்ளது. 2024க்குள் நான்காயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழ்நாட்டிற்க்கு வர இருக்கிறது” என்றார்.