கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்ற இடத்தில் செல்போன் ஏற்றிச்சென்ற லாரியை கொள்ளையர்கள் கடத்தினர்.
சூளகிரி அருகே கடத்தப்பட்ட லாரியில் இருந்த செல்போன்களை அவர்கள் தங்களது லாரியில் மாற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர். சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்ஃபோன்களை கடத்திய நபர்களை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை காவல் துறையினர் வடமாநிலங்களில் ஒரு மாதமாக முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
செல்போன் ஏற்றிச்சென்ற லாரியை கடத்திய 6 பேர் கைது சில வாரங்களுக்கு முன்பு இரண்டு பேரை கைது செய்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான ஆறு பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தர் சவுகான், பவானி சிங், கமல் சிங், பாரத் அஸ்வினி, ஹேம்ராஜ், அமீர்கான் ஆகியோர் ஆவர்.
அவர்களிடம் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு லாரிகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: லாரியை கடத்த முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகனிடம் விசாரணை