கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரு அடுத்த சூளகிரி அருகே உள்ளது உலகம் என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் 29 பட்டியலின குடும்பங்களும், 300-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களும் வசித்துவருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சூர்ய குமார் என்னும் பட்டியலின இளைஞர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரளா என்னும் சிறுமியைக் காதலித்து, கலப்புத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின்போது சரளா, மைனராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், உறவினர்கள் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த இளைஞர்களையும், குடும்பத்தாரையும் சாதி ரீதியில் கடுமையான வார்த்தைகளால் பேசி, பலமாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனால் பட்டியலின குடும்பங்கள் சார்பில் சூளகிரி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்ததாகவும், சரளாவின் குடும்பத்தார் மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக எதிர் வழக்கும் தொடுத்துள்ளனர். பின்னர் கிராம பஞ்சாயத்தில் இருதரப்பிலும் புகார்கள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், சரளாவின் பெற்றோர் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளனர்.