கரூர் மாவட்டம் ஆதிவிநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா(25). பி.காம் சிஏ படித்த பட்டதாரியான இவருக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி என்பவருடன் காதல் ஏற்பட்டது. அதன்பின் பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின் சக்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சௌமியா ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் சென்னையில் பணியாற்றும் காவலருமான சுரேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சௌமியா, அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு உறவினர் என்று கூறி கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சௌமியா கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் வெளிவந்து, சுரேஷை பிரிந்து ஈரோட்டைச் சேர்ந்த டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் சீனிவாசன் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து போத்தனூர் பகுதியில் தங்கியிருந்தார்.
அப்போதும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மற்றும் தங்க நகைகளை பெற்றுள்ளார். அந்த வகையில் 37 சவரன் தங்கம் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதனடிப்படையில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் சௌமியா அடைக்கப்பட்டார்.
முன்னதாக தலைமறைவாக இருந்த சௌமியா காந்திகிராமத்தில் உள்ள பிரபல ஜோசியர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி சௌமியாவால் பாதிக்கப்பட்டவர், கண்ணன் என்பவர் பலருடன் அங்கு சென்று சௌமியாவை பிடித்து (செப்.15ஆம்) இரவு கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.