கரூர்:ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharat Petroleum Corporation) நிறுவனத்திற்குச் சொந்தமான டெர்மினல் பாயின்ட் முன்பு, தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி (59), டேங்கர் லாரி கிளீனராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் நேற்று (நவம்பர் 22) மாலை 3 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வலிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வழங்க காலதாமதப்படுத்திய நிர்வாகம்
இதனையடுத்து செல்வமணியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை அலுவலர்களிடம் கேட்டபோது, ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வழங்காமல் காலதாமதப்படுத்தியுள்ளனர். அதன் பின் லை 4.30 மணி அளவில் செல்வமணி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிரப்பும் மையங்களுக்கு பெட்ரோல், டீசல் எடுத்துச்செல்லும் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்காமல், நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு பாரத் பெட்ரோலியம் கரூர் டெர்மினல் நிர்வாகத்தைக் கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடலை வைத்து தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம்
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வாங்கல் காவல் நிலைய காவல் துறையினர், டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து இன்று (நவம்பர் 23) அதிகாலை வரை செல்வராஜின் உடலைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாரத் பெட்ரோலியம் டெர்மினல் முன்பு போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் 600 வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், கிளீனர்கள் சுமார் 1000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோல் நிரப்பும் மையங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் இடர் உருவாகியுள்ளது.
அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டேங்கர் லாரி ஓட்டுநர்கள் அவசர உதவி காலத்தில் அலட்சியமாக இருந்ததால், தொழிலாளி உயிரிழந்ததாகவும் அதற்கு அலுவலர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை, நிவாரணம் வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:எங்க வீட்டு பெண்: காவல் நிலையத்தில் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி