தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் பெண்களைக் குறி வைத்து நூதன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்..! - சைபர் குற்றங்கள்

Karur city police station besieged: கரூரில் பெண்களைக் குறி வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் நகர காவல் நிலையத்தை மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

karur city police station besieged
கரூரில் குடும்பப் பெண்களைக் குறி வைத்து நூதன மோசடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 3:33 PM IST

Updated : Dec 30, 2023, 5:55 PM IST

கரூர்:கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வந்த மணிமேகலை என்ற பெண் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் உள்ளூர் தனியார் நிதி நிறுவனங்களில் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் பெற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களிடமும் தனக்கு குடும்பத் தேவைக்காக, அவர்கள் பெயரில் கடன் பெற்றுக் கொண்டு, அந்த கடனை தானே செலுத்தி விடுவதாகக் கூறி ஒவ்வொரு தனி நபரிடம் இருந்தும் ரூபாய் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கடன் பெற்று அதனைச் செலுத்தி வந்துள்ளார்.

இந்த சூழலலில் டிசம்பர் 28ஆம் தேதி திடீரென வீட்டை காலி செய்து விட்டுத் தலைமறைவான மணிமேகலை மற்றும் அவரது குடும்பத்தாரை எங்குத் தேடியும் கிடைக்காததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்கள் கரூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்த மோசடி சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரி என்ற பெண் கூறுகையில், "ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களுக்கும், கடன் பெற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொண்ட மணிமேகலை, எங்கள் பெயரில் கடனை பெற்றுக்கொண்டு அதனைச் செலுத்தாமல், தலைமறைவாக உள்ளார்.

இதனால், ஒவ்வொருவர் வீட்டிலும் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், திடீரென முழுத் தொகையும் செலுத்த நெருக்கடி கொடுக்கின்றனர். ஆகவே, நிதி மோசடி செய்து தலைமறைவாக உள்ள மணிமேகலையை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கணவர் உள்ளிட்டவர்களுக்குத் தெரியாமல் பல லட்சம் ரூபாய் வரை தங்கள் பெயரில் கடனை பெற்று மணிமேகலைக்கு வழங்கியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜெகநாத், பாதிக்கப்பட்ட பெண்களை அழைத்துச் சட்டப்படி பண மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அமைதியாக, பெண்கள் களைந்து சென்றனர். சமீப காலமாக நூதன முறையில் குடும்பப் பெண்களைக் குறி வைத்து பண மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து காவல்துறையும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், பண மோசடிகள், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நூறாண்டு கடந்த பாம்பன் பாலம்! நீங்காத நினைவுகளை பகிரும் ரயில்வே ஊழியர்கள்

Last Updated : Dec 30, 2023, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details