கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காந்திகிராமம் பகுதியில் வாக்குச்சாவடி எண் 85-ன் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது கனிமொழி என்ற வாக்காளர் தனது பெயரும், தனது மகனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஆவேசமடைந்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கொந்தளித்த பெண்மணி...! - வாக்களிக்கும் உரிமை
கரூர்: வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் வாக்களிக்கும் உரிமையை தாருங்கள் இல்லை என்றால் நான் கட்டிய வரி பணம் அனைத்தையும் திருப்பி வழங்குங்கள் என வாக்காளர் கொந்தளித்த சம்பவம் வாக்குச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லாததால் ஆவேசமடைந்த அவர் இதுபற்றிச் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாதபோது என்ன செய்வது எனக் கேள்வியெழுப்பினார்.
இதே வாக்குச்சாவடியில் இறந்த 25 பேரின் பெயர்கள் வாக்காளர் படிவத்தில் உள்ளன. ஆனால் எனது பெயரும், எனது மகனின் பெயரும் விடுபட்டுள்ளது என வேதனை தெரிவித்தார். மேலும் நான் அரசிற்கு எல்லா விதமான வரிகளையும் செலுத்தி வருகிறேன் எனக்கு வாக்குப்பதிவு அளிக்கும் உரிமையை தாருங்கள் இல்லையென்றால் நான் கட்டிய வரிப்பணத்தை திரும்ப வழங்குங்கள் என காட்டமாகக் கூறினார்.