கரூர்: கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா. இவரது கணவன் பாலசுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.
இந்நிலையில் மல்லிகாவும் பாலசுப்பிரமணியமும் இணைந்து சொந்த உழைப்பில் வாங்கிய 17 ஏக்கர் நிலத்தில், தற்போது மல்லிகா உழுது விவசாயம் செய்கிறார்.
அராஜகத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்
அவருக்கு உதவியாக பாலசுப்பிரமணியத்தின் உடன் பிறந்த சகோதரர் நீலமேகமும், அவரது மனைவி வளர்மதியும் இணைந்து ஒரே குடும்பமாக விவசாயம் செய்துவருகின்றனர்.
பாலசுப்பிரமணியன் நீலமேகம் ஆகியோரின் உடன் பிறந்த அண்ணன் வைத்தீஸ்வரனின் மகன் ஜெகதீஸ்வரன், மல்லிகாவை மிரட்டி அத்துமீறி அவரது தோட்டத்து வீட்டில் குடியேறியதுடன், கடந்த ஓராண்டாக பல்வேறு இடையூறுகள் மேற்கொண்டு வருகிறார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... புகார் மீது நடவடிக்கை இல்லை
இதற்காக மல்லிகா மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் மாயனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலகிருத்திகா, ஜெகதீஸ்வரன் அளித்த புகார் ஒன்றுக்கு மல்லிகா, வளர்மதி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததுடன் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணனுக்கு, பாதிக்கப்பட்ட மல்லிகா தரப்பில் புகார் அளிக்கப்பட்டதால், ஆய்வாளர் பாலகிருத்திகா மாயனூர் காவல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பயிகளை அழித்து அத்துமீறல்
மேலும் இது குறித்து குளித்தலை வருவாய் கோட்டாட்சியர், இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே ஜெகதீஸ்வரன் இரண்டு நாட்களுக்கு முன்பு மல்லிகா தோட்டத்தில் பயிரிட்டுள்ள சோளத்தட்டு பயிர்களை அழித்தும், தோட்டத்தில் ஏலத்துக்கு விடப்பட்ட தென்னை மரங்களில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய்களை பறித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர். அங்கு சென்றால் மாயனூர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர்.
தீ குளிக்க முயற்சி-இருவர் கைது
இவ்வாறு தொடர்ந்து அலைக்கழிப்பு செய்ததால் நேற்று (ஆகஸ்ட் 2) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மல்லிகா, வளர்மதி ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சித்தனர். இதனை கண்ட அருகிலிருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி மேலே தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.
மல்லிகா விவசாயம் செய்து வரும் இடத்திற்கு அனைத்து ஆவணங்களும், உரிமையும் இருந்தும், மாயனூர் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள ஜெகதீஸ்வரனிடமிருந்து நிலத்தையும், வீட்டையும் மீட்டுத்தருமாறு மல்லிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
மாயனூர் காவல் துறையை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது சம்பந்தமாக, தான்தோன்றிமலை காவல் துறையினர் மல்லிகா, வளர்மதியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
சமநீதி கழகத்தின் நிர்வாகி கண்டனம்
இது குறித்து சமநீதி கழகத்தின் நிர்வாகி அண்ணாத்துரை கூறுகையில், “கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அலுவலர்கள் அலைக்கழிப்பு செய்து வருவதால், பொதுமக்கள் விரக்தியில் போராட்டம் நடத்துகின்றனர்.
ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்